Thursday, February 18, 2010

என்னதான் முடிவு?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வுப் பிரச்னையில் மத்திய அரசு, மாநில அரசுகளையும் மாநில அரசுகள், மத்திய அரசையும் மாறிமாறிக் குற்றஞ்சாட்டிக்கொள்வதில் அர்த்தமில்லை.

கடந்த 2004}ல் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயத்தை - ஒரு குவிண்டால் நெல் விலையை ரூ. 580-ல் இருந்து ரூ. 1,030 ஆகவும், கோதுமை விலையை ரூ. 620-ல் இருந்து ரூ. 1,100 ஆகவும் உயர்த்தியது மத்திய அரசு. பொருளாதார நிபுணர்கள் இப்போதைய பிரச்னைக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடுவது இதைத்தான்.

ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து. இந்திய விவசாயிகளுக்கு விவசாயத்தின் மீது இருந்த விரக்தி கொஞ்சமேனும் குறைய மத்திய அரசின் இந்த முடிவு காரணமாக இருந்தது என்பதுதான் உண்மை. இதன் விளைவாகத்தான் 2008}ல் சாதனை அளவாக நாட்டின் உணவு தானிய உற்பத்தி 23 கோடி டன்களாக உயர்ந்தது.

அரிசி}கோதுமை விலை 200 சதம் அளவுக்கு உயர்ந்திருந்தாலும், இப்போதைய விலைவாசி உயர்வுக்கான முக்கிய காரணி அதுவல்ல. ஏனெனில், ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தின் மாதச் செலவில் அரிசி}கோதுமைக்கான செலவு என்பது 10 சதவீதத்துக்கும் குறைவுதான். தவிர, ரேஷன் விநியோகமும் அரிசி}கோதுமை செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்துகிறது.

பிரச்னை அரிசி-கோதுமையின் விலை உயர்வு மட்டுமல்ல; எல்லா தானியங்களின் விலையும் உயர்ந்திருக்கிறது; எல்லா மளிகைப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறது; சலவைப் பொருள்களில் தொடங்கி மருந்துகள் வரை எல்லா ரசாயனப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறது; எவ்வித நியாயமுமின்றி வீட்டு வாடகைகூட 25-லிருந்து 100 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வு என்பது அரிசி, கோதுமை அல்லது உணவுதானிய விலைகளுக்கு மட்டும் ஏற்பட்ட ஒன்றல்ல. குறிப்பாக மூன்று முக்கியமான விஷயங்களில் நம் அரசு தொடர்ந்து தவறிழைக்கிறது. அதன் தொடர் விளைவுதான் விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது.

1. உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பெட்ரோலிய நுகர்வோர் இந்தியா. ஆனால், உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் நாட்டின் தேவையில் 30 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 40 சதம் அளவுக்கு நாட்டின் பெட்ரோலியத் தேவை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால்,பெட்ரோலிய நுகர்வைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, பெட்ரோலியப் பொருள்களுக்கு ஏறத்தாழ 50 சதம் வரை வரி விதித்து வருமானம் பார்க்கிறது. சர்வதேசச் சந்தையில் விலை உயரும்போதெல்லாம் இங்கும் விலையை உயர்த்தி உயர்த்தி சரக்குப் போக்குவரத்தை அரசே அதிகச் செலவுமிக்கதாக மாற்றிவிட்டது.

2. அறுவடைக்குப் பிந்தைய ரூ. 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள உற்பத்திப் பொருளை நாம் வீணடிக்கிறோம். இந்தியாவில் ஆண்டுக்கு 17.5 கோடி டன் பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றில் பதப்படுத்தப்படுவது 2.2 சதம்தான். முறையான பதப்படுத்தல் கட்டமைப்பு இல்லாததே இதற்குக் காரணம். அரசு இந்தத் தவறை ஒப்புக்கொள்கிறது. ஆனால், கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதிலோ, உணவுப் பொருள்கள் வீணாகாமல் தடுப்பதிலோ தீவிர நடவடிக்கைகளை எடுக்கிறதா என்றால் இல்லை.

3. பதுக்கலையும் கடத்தலையும் அநியாய விலை நிர்ணயத்தையும் வேடிக்கை பார்க்கிறோம். இது ஏதோ பெரிய அளவில் மட்டும் நடக்கும் சங்கதியல்ல; டீக்கடை, பெட்டிக்கடை வரை தொடர்கிறது. நம் தெருமுனையில் கடை வைத்திருக்கும் டீக்கடைக்காரும் பெட்டிக்கடைக்காரரும்கூட விலைவாசியைத் தீர்மானிக்கிறார்கள் என்பதே உண்மை.

தமிழகத்தில் 2008}ல் ஒரு டீயின் விலை ரூ. 2} 3. இப்போது ரூ. 4}6. இத்தனைக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பசும்பால், எருமைப்பால் விலையை லிட்டருக்கு முறையே ரூ. 2, ரூ. 5 மட்டுமே உயர்த்தியிருக்கிறது அரசு. பால் விலையும் சர்க்கரை விலையும் உயர்ந்திருக்கின்றன. ஆனால், டீ விலையை 200 சதமாக உயர்த்தும் அளவுக்கு நிச்சயம் அவற்றின் விலை உயரவில்லை. ஒரு லிட்டர் பால் அதிகபட்சம் ரூ. 24}க்கு விற்கப்படும் சூழலில், 50 மி.லி. பால்கூட சேர்க்கப்படாத 100 மி.லி. டீயின் விலை ரூ. 5 என்பது நிச்சயம் கொள்ளைதான்.

ஆனால், அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. இது "சிங்கிள் டீ பிரச்னை' என்று நினைக்கிறது. ஆனால், டீ விலை உயர்வோ ஒரு பெரிய சமூக விளைவாக மாறுகிறது. எங்கெல்லாம் பொருள்கள் அநியாய விலை விற்கப்படுவதாக நினைத்து நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்களோ அங்கெல்லாம் இந்தப் பதிலை எதிர்நோக்க வேண்டியிருக்கும்: ""எந்தக் காலத்தில் இருக்கிறார்கள்? டீ விலை ரூ. 5; தெரியுமா?''

அதேசமயம் டீக்கடைக்காரரிடம் டீ விலை உயர்வு குறித்துக் கேளுங்கள், அவருடைய பதில் இப்படி இருக்கும்: ""வேறென்ன செய்ய முடியும்? எல்லாப் பொருள்கள் விலைகளும் உயர்ந்துவிட்டன.''
சந்தையில் ஒரு கிலோ ரூ. 15-க்கு விற்கும் வெங்காயத்தை சந்தையிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளியிருக்கும் ஒரு கடையில் ரூ. 28-க்கு விற்க இந்திய வியாபாரிகளால் மட்டுமே முடியும். யார் கேட்பது? அவர்களிடம்தான் பதில் இருக்கிறதே?
இப்படியாக, இந்தியாவில் ஒவ்வொருவரும் மற்றவர்களின் பெயரால் விலையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதில், அரசாங்கத்தின் மிகப் பெரிய தவறு என்னவென்றால், இதையெல்லாம் அனுமதிப்பது; வேடிக்கை பார்ப்பது; செயல்படாமல் இருப்பது.

மக்கள்தொகைப் பெருக்கத்தையும் எதிர்கால உணவுத் தேவையையும் எதிர்கொள்ளும் வகையில், நாட்டின் விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், பெட்ரோலியப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ரேஷன் முறையைக் கொண்டுவர வேண்டும். அத்தியாவசியப் பொருள்களைக் கையாள்வதற்கென்று பிரத்யேகமான - மலிவான சரக்குப் போக்குவரத்து அமைப்பை உருவாக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களுக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கும், பதுக்கலைத் தடுக்கும் தன்னாட்சி அதிகாரமிக்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். உணவு மானியமாகச் செலவிடப்படும் ரூ. 1 லட்சம் கோடி முறையாகச் சென்றடைய பொது விநியோக அமைப்பைக் கட்டுக்கோப்பானதாக மாற்ற வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் விலைவாசியைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது கானல் நீரைத் தேடி நெடும்பயணம் போகும் வீண் முயற்சியாகத்தான் இருக்கும். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய். ஒரு சிங்கிள் டீ ஆறு ரூபாய். கேலிக்கூத்தாக அல்லவா இருக்கிறது ஆட்சியின் லட்சணம்?

No comments:

Post a Comment